×

குடியுரிமை திருத்த சட்டம் எதிர்த்து மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து கண்டன குரல்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கான விதிகளை ஒன்றிய அரசு அண்மையில் அறிவிக்கை செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். குடியுரிமை திருத்தச் சட்டம், மதச்சார்பின்மை என்கிற அரசமைப்பு சட்ட விழுமியத்துக்கு முரணாக, குடியுரிமையை மத அடையாளத்தோடு இணைப்பது ஆபத்தானது.

2019ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தை நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் நேரத்தில் செயல்படுத்த முனைந்துள்ளது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டதாகும். மோடி அரசின் அனைத்து பம்மாத்து முயற்சிகளும் எடுபடாமல் தவிடுபொடியாகியுள்ள நிலையில், தற்போது கடைசி ஆயுதமாக இச்சட்டத்திற்கான விதிமுறைகளை அறிவித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இது ஒன்றிய அரசின் வரலாற்றுப் பிழை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருப்பது நகைப்பிற்குரியது.

குடியுரிமை திருத்தச் சட்டம் வந்தபோது அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அதனை ஆதரித்தன. மாநிலங்களவையில் அதிமுக 11, பாமக 1 வாக்குகள் எதிர்த்து விழுந்திருந்தால் சட்டத்தை நிறைவேற்றி இருக்க முடியாது. இந்த துரோகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள். தமிழ்நாட்டில் இச்சட்டத்தை செயல்படுத்த விட மாட்டோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இந்த கொடூரமான குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து கண்டனக் குரலெழுப்ப முன்வர வேண்டும்.

 

The post குடியுரிமை திருத்த சட்டம் எதிர்த்து மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து கண்டன குரல்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : K. Balakrishnan ,Chennai ,State Secretary of ,Communist Party ,Communist Party of India ,Union Government ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல்...